மதுரையில் இருந்து விமானத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஒரு மணி நேரத்தில் வந்த கல்லீரல்: நோயாளிக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயதான ஆண் நோயாளிக்கு கல்லீரல் செயலிழந்தது. இதற்காக அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல் பொருத்த பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கிய 39 வயதான ஒரு வாலிபர் சிகிச்சையின்போது கடந்த 10ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்த துயரத்தை சமாளித்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை தானமாக வழங்க அந்த வாலிபரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

தகவலறிந்ததும் மருத்துவ குழுவினர், அன்றைய தினமே மதுரையில் இருந்து விமானம் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமாக ஒரு மணி நேரத்தில் அந்த வாலிபரின் கல்லீரலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கல்லீரல் மாற்று துறை இயக்குனர் பேராசிரியர் ஜஸ்வந்த் தலைமையில் மயக்கமருந்து துறையின் தலைவர் பேராசிரியர் மாலா உள்பட மருத்துவக் குழுவினர், கல்லீரல் பாதிக்கப்பட்ட 52 வயதான நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தினர்.

பின்னர் 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் இருந்த நோயாளி, நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சுயமாக சுவாசித்து நன்றாக செயல்பட்டு வருகிறார். இதேபோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 81 உடல் உறுப்புகள் தானம் பெற்று, மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது. இப்பணியை ஒரு மணி நேரத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த உறுதுணையாக இருந்த அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மதுரை ராஜாஜி மருத்துவமனை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை இந்தியன் ஏர்லைன்ஸ் 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கிடைத்த மிகப் பெரிய சாதனை என ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: