பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் நேரடியாக அண்ணா பல்கலையில் பொறியியல் 2ம் ஆண்டு சேர அரசு நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில் ‘‘மதுராந்தகம் தொகுதி அதிக அளவில் விவசாயிகள் வசிக்கின்ற பகுதி. இந்த பகுதியில் படிக்கும் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இவர்கள் அரசு கலைக்கல்லூரியிலோ அல்லது தொழில்நுட்ப கல்லூரியிலோ படிக்க வேண்டும் என்றால் சுமார் 60 கி.மீ. சென்று செங்கல்பட்டிற்கு தான் செல்ல வேண்டும். இதனால், உயர்கல்வி தொடர முடியாமல் போகிறது. எனவே, சிரமத்தை போக்க அச்சிறுப்பாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை அமைக்க வேண்டும்” என்றார்.

இதற்க்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை அரசு  மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் 509 இருக்கிறது. அதில் முழுமையான இடங்கள் நிரம்பவில்லை. மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கிறது. அங்கும் காலியிடங்கள் அதிகமாக இருக்கிறது. வரும் காலங்களில் பாலிடெக்னிக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடியாக சேரும் வசதி இருந்தது. அது நிறுத்தப்பட்டிருந்தது. அது முதல்வர் ஆணையை பெற்று இந்த ஆண்டு மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிக்கும் ஆசை இருந்தால் 2ம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: