திருப்பூரில் விபத்து சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அண்ணன்தம்பி பலி

திருப்பூர் : திருப்பூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அண்ணன்தம்பி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர்  தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கள் மணிகண்டன் (21),  ஜெய்சூர்யா (19). இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில்   தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஜெய்சூர்யா  சொந்த வேலை  காரணமாக வெளியூர் சென்றுவிட்டு திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்திற்கு  நேற்று முன்தினம் வந்தார். இதையடுத்து அவரை மணிகண்டன் மோட்டார்  சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

திருப்பூர் தாராபுரம்  சாலையில் நேற்று  முன்தினம் மாலை சென்றபோது திடீரென நிலை  தடுமாறிய மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச்சுவரில்  மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில்  இருந்து தூக்கி  வீசப்பட்டனர்.  இதில் பலத்த காயமடைந்த ஜெய்சூர்யா சம்பவ இடத்திலேயே   பலியானார். மணிகண்டன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். தகவலறிந்த நல்லூர் போலீசார் சம்பவ இடம் வந்து ஜெயசூர்யாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில்  போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.   இந்நிலையில் சிகிச்சை  பலனின்றி  நேற்று காலை மணிகண்டனும் பலியானார். இந்த விபத்து குறித்து   நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சகோதரர்கள்  பலியான சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: