சேரன்மகாதேவி அருகே குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலி

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி அருகே குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலியானார்.சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளம் புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் பால்துரை மகன் ஜெபசீலன்(32), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பால்ஜோஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த 1 வாரமாக தாய் வீட்டிற்கு சென்றிருந்த சுகந்தி நேற்று காலை ஊருக்கு வந்துள்ளார். மாலை வீட்டின் சுற்றுப்புறத்தை சுகந்தி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு விளையாடிய குழந்தை வீட்டின் அருகேயுள்ள கம்பி வேலியில் சாய்ந்ததும் அலறியது.  

உடனே குழந்தையை தூக்கியபோது தான் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்திருப்பதை உணர்ந்த  சுகந்தி குழந்தையை தள்ளிவிட்டுள்ளார். நிலை தடுமாறி கம்பி வேலியில் சாய்ந்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சுகந்தி பலியானார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுகந்தியை கம்பி வேலியிலிருந்து தூக்க முயன்றபோது அவர்களையும் மின்சாரம் லேசாக தாக்கியுள்ளது. இதனையடுத்து மரக்கம்பு மூலம் சுகந்தியை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சுகந்தி உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் மின்சாரம் தாக்கியதில் கையில் காயமடைந்த குழந்தையை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது அருகிலுள்ள வீட்டிலிருந்து எர்த் கம்பி மூலம் மின்சாரம் வேலியில் பாய்ந்து சுகந்தி பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய் மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: