வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அதிகாலை பரபரப்பு ஓசியில் காய்கறி தர மறுத்த விவசாயி மண்டை உடைப்பு

* செல்போன், பணம் பறிப்பு * 5 பேர் கும்பல் அட்டூழியம்

வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

காட்பாடி அடுத்த லத்தேரி, பெரியகனகசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன்(45) என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 3.45 மணியளவில் வழக்கம்போல் காய்கறிகளை எடுத்து கொண்டு வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 5 பேர், ஓசியில் காய்கறிகள் கேட்டு கண்ணனை மிரட்டியுள்ளனர். அதற்கு கண்ணன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அருகில் இருந்த எலக்ட்ரானிக் எடை மெஷினால் கண்ணனின் தலையில் தாக்கியுள்ளது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு கும்பல் தப்பியது.

கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலூரில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விவசாயியை தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் நேற்று அதிகாலை வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘அதிகாலை லத்தேரி பெரியகனகசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயியிடம், மர்மகும்பல் பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு எலக்ட்ரானிக் தராசை எடுத்து தாக்கியுள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேதாஜி மார்க்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே வியாபாரிகளுக்கு இரவு, பகலிலும் பாதுகாப்பு வழங்கவேண்டும். உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவின் புகலிடமான மார்க்கெட்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், சுமை தூக்குபவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் தினந்தோறும் சுற்றித்திரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் பழைய பஸ் நிலையம், மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பது, மிரட்டுவது, காய்கறிகளை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: