மோசடி பட்டாக்களை வைத்து அபகரித்து வைத்திருக்கும் நிலங்களை மீட்க நடவடிக்கை: தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில்” தாம்பரம் தொகுதி, கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட அரசு முன்வர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில்,”கடப்பேரி கிராம நிர்வாக அலுவலக் கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

எஸ்.ஆர்.ராஜா: பல பேர் இன்றைக்கு அரசு நிலங்களை மோசடியான  டாக்குமெண்டுகளை தயாரித்து, பட்டாக்களை தயாரித்து, அரசு நிலங்களை வைத்திருக்கிறார்கள். அதற்காக, புதிதாக திமுக அரசு, அரசாணை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், சத்தியபாமா கல்லூரி நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கிற 90 ஏக்கர் இடம் குறித்து இதே சட்டமன்றத்தில் பேசப்பட்டு தான். அந்த நிலம் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இன்றைக்கு எங்கெல்லாம் அரசு நிலங்கள் தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றார்கள். போர்ஜரி பட்டாக்களை வைத்து நிலங்களை அபகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கு அரசு முன்வருமா?.

அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: சென்னையைச் சுற்றியிருக்கிற 4 மாவட்டங்களில் இதேபோல போர்ஜரி பட்டாக்கள், சம்பந்தமில்லாத பத்திரங்களெல்லாம் இருக்கின்றன. எந்தெந்த இடங்கள் நீண்ட நெடிய காலமாக ஆக்கிரமிப்பில் இருக்கிறதென்று, பல வருடங்களாக உறுப்பினராக இருக்கிற உறுப்பினர்களுக்கு தெரியும். எந்தெந்த இடங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக, ஜேப்பியார் கல்லூரி ஆக்கிரமிப்பில் இருக்கிறதென்று சொன்னவுடன் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த 92 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் உபயோகத்திற்கு, எந்ததெந்த துறைக்கு வேண்டுமென்பதையெல்லாம் கேட்டிருக்கிறோம். அதை அந்த துறைக்கு நாங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்போகிறோம். அதேபோல் வேறு இடங்கள், பெரிய இடமாக, முழுமையாக இருந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கும். சிறிய சிறிய இடங்களில் எல்லாம் அரசு கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: