சோழிங்கநல்லூர் தொகுதியில் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் பட்ஜெட் விவாதத்தில் சோழிங்கங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூரில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் அலுவலகம் பல ஆண்டாக வாடகையில் இயங்கி வருவதால் சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். அமைச்சர் சக்கரபாணி : வட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு சுமார் 30 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உதவி ஆணையர் அலுவலகம் கட்ட மாவட்ட கலெக்டர் சம்மதம் தெரிவித்தார். உடனடியாக உதவி ஆணையர் அலுவலகம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லூர் தொகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரவும்,  அதிக குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட  ரேஷன் கடைகளை பிரிக்க வேண்டும்.

அமைச்சர் சக்கரபாணி : சோழிங்கநல்லூர் தொகுதியில் 53 ரேஷன் கடைகள் 1000 முதல் 1500 குடும்ப அட்டைகளுடனும், 28 ரேஷன் கடைகள் 1500 முதல் 2 ஆயிரம் குடும்ப அட்டைகளுடனும் செயல்பட்டு வருகின்றன.

200 குடும்ப அட்டைகளுக்கு மேல் 23 ரேஷன் கடைகள் செயல்பாட்டில் உள்ளன. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் 104 ரேஷன் கடைகள் உள்ளன. அட்டைதாரர்களின் வசதிக்கேற்ப அருகிலேயே ரேஷன் கடை அமைக்கவும், பகுதி நேர கடைகளாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 199வது வட்டத்திற்குட்பட்ட ரேஷன் கடை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.

Related Stories: