சிங்கார சென்னை நிதியாக சென்னை மாநகராட்சிக்கு ரூ.500 கோடி: கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: பட்ஜெட் தாக்கலுக்கு பின் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  அளித்த பேட்டி: 2022-23 ம் நிதி ஆண்டில், வருவாய் மற்றும் மூலதன வரவு 6 ஆயிரத்து 384 கோடி வருவாயாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், செலவு 6,747 கோடியாக இருக்கலாம். மொத்தம் 363 கோடி அளவுக்கு இது பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 554 கோடி பற்றாக்குறை யாக இருந்தது , இந்த ஆண்டு பற்றாக்குறை குறைந்துள்ளது. சென்னையில் அம்மா உணவகம் திட்டம் தொடரும். சென்னையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் , தமிழகத்தின் பெருமைமிகு தலைநகராக சென்னை இருக்கிறது , எனவே வளர்ச்சிப் பணிகள் தொடர்வது அவசியம்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி வள்ளுவர் கோட்டம் , கோயம்பேடு - மதுரவாயல் சாலை , ஆலந்தூர் , கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் காலனி , ஓட்டேரியில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. கணேசபுரம் மேம்பாலம் , உஸ்மான் சாலைப் பகுதியிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளன. வட சென்னையில் இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் நடவடிக்கை எடுக்க முடியும், சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஏற்கனவே 91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

500 கோடி ரூபாய் சிங்காரச் சென்னை நிதியாக தமிழக அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சியின் கடன் தொகை 2500 கோடியளவில் இருக்கலாம். மக்கள் பிரதிநிதிகள் தேர்வாகிவிட்டதால் , பட்ஜெட்டுக்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கவில்லை. முன்னர் அதிகாரிகள் மட்டுமே இருந்ததால் பொதுமக்கள் கருத்து கேட்டு பட்ஜெட் தயாரித்தோம். மாமன்ற உறுப்பினர்கள் கூறுவதை அதிகாரிகள் கேட்டு நடக்க வேண்டும் , சில மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர் , அது குறித்து கவனமாக பரிசீலிப்போம். இவ்வாறு பேசினார்.

Related Stories: