வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு: புதிய சட்டம் இயற்ற கோரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டம் விரைவில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அவருடன் சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்பின்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அன்புமணி தெரிவித்தார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கடிதம் ஒன்றையும் முதல்வரிடம் அவர் வழங்கினார். பின்னர் வெளியே வந்த அன்புமணி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த வாரம் சனிக்கிழமை பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எனது தலைமையில், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம்.

இந்த சந்திப்பின்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறினோம். முதல்வருடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தினோம்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் அனுமதிக்கு செல்ல தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், தரவுகள் (டேட்டா) சரியாக இல்லை என்று கூறியுள்ளது. அதை முறையாக சேகரிப்பதுடன், விரைவில் சட்டப்பேரவையிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். முதல்வரும் எங்களிடம், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள தரவுகளை தமிழக அரசால் ஒரு வாரத்திற்குள் சேகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், “மூத்த வக்கீல்களை கொண்டு அரசு வாதாடவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளதே?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்புமணி, “மூத்த வக்கீல்களைத்தான் தமிழக அரசு அமர்த்தியிருந்தது. இந்த வழக்கை தமிழக அரசு நல்ல முறையில் கையாண்டது. தமிழகத்தில் 2 பெரிய சமுதாயங்கள் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்தான். அதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது. வன்னியர்களுக்குத்தான் இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான், அவர்கள் பின்தங்கி உள்ளனர். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கினால், அவர்களும் உயருவார்கள், தமிழகமும் முன்னேறும்” என்றார்.

Related Stories: