ஆந்திராவிலிருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல்-தம்பதி உள்பட 3 பேர் கைது

நாகை : ஆந்திராவிலிருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மதுரையை சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு எஸ்ஐக்கள் கந்தசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நாகை புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏற முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், 3 பேரையும் நாகை டவுன் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கமாயன்(42), இவரது மனைவி ஓச்சம்மா(32). இவர்கள் இருவரும் தற்போது கர்நாடக மாநிலம் ரெய்சூர் தாலுகா சக்தி நகரில் வசித்து வந்ததும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விஜயநகர் பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த அய்யர்சாமி(20) என்பருடன் சேர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரயில் மூலம் திருச்சி வந்ததும், பின்னர் அங்கிருந்து பஸ்சில் நாகை வந்த 3 பேரும், நாகையில் இருந்து கஞ்சாவை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தம்பதி உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: