ஜோலார்பேட்டை சந்தையில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற திருநங்கைக்கு அடி, உதை-போலீசிடம் ஒப்படைப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை சந்தையில் திருநங்கை ஒருவர் வாலிபரிடம் செல்போனை பறிக்க முயன்றதால் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி அவரை போலீசிடம் ஒப்படைத்தனர்.

ஜோலார்பேட்டை, சந்தை கோடியூரில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை கூடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தை கூடியது. அப்போது மாலை சுமார் 7 மணியளவில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சந்தையில் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அப்போது, திருநங்கை ஒருவர் சந்தையில் பொருட்கள் வாங்க வந்த ஒரு வாலிபரிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். அப்போது சில்லரை இல்லாததால் அந்த வாலிபர் தனது பாக்கெட்டில் இருந்து ₹50 கொடுத்து ₹10 எடுத்துக்கொண்டு மீதம் ₹40ஐ திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த திருநங்கை மீதி பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் மீதி பணத்தை தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். அப்போது மீதி பணத்தை தரமுடியாது எனக்கூறி  அந்த வாலிபரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளார். இதனை தட்டிக்கேட்ட வாலிபரை அந்த திருநங்கை சரமாரியாக தாக்கியதால் வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மீட்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

இதனைதொடர்ந்து அந்த திருநங்கை இதே போன்று மற்றவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்டாராம். இதனால் பொறுமையை இழந்த பொதுமக்கள் அந்த திருநங்கையை கண்டித்துள்ளனர். ஆனால் மீண்டும் பல்வேறு நபர்களை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த திருநங்கையை  சரமாரியாக தாக்கி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது திருநங்கை தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபரின் உறவினரான மற்றொரு திருநங்கை போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த திருநங்கையை தரதரவென இழுத்துச் சென்று செல்போன் பறித்த திருநங்கையை தாக்கியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, இரண்டு திருநங்கைகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இதுபோன்ற அத்துமீறல் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: