அம்மா உணவகங்கள் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை: வேலுமணிக்கு அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: அம்மா உணவகங்கள் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி (அதிமுக) பேசியதாவது:

2022-2023-ம் ஆண்டு பட்ஜெட்டில், நகராட்சி துறைக்கு ₹26,447 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு போதாது. கூடுதலாக நிதி ஒதுக்க  வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 19-2-2013ம் ஆண்டு அம்மா உணவகம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஏழை, எளியவர்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதற்கான தொடங்கப்பட்ட திட்டம். அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு 2021-2022, 2022-2023-ம் நிதியாண்டில்,  நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதை முடக்கும் வகையில் செயல்படக்கூடாது. அத்திக்கடவு -அவினாசி திட்டம் கோவை மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் ஆகும். இந்த திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கோவையில் நடைபெற்று  வருகிறது. அந்த திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு: கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. எந்த திட்டமும் முடக்கப்படவில்லை. குறிப்பாக அம்மா உணவகங்களை இந்த அரசு முடக்கவில்லை. மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி: திறன்மிகு நகரங்கள் திட்ட செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதை துரிதப்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுற்றுலா நகரமான உதகை நகருக்கு சிறப்பு நிதியாக ₹50 கோடி கூடுதலாக ஒதுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதிகளும் ஒதுக்கப்படவில்லை. புதிய திட்டம் எதுவும் இல்லை.

அமைச்சர் கே.என்.நேரு: கலைஞர் மேம்பாட்டு திட்டத்துக்கு ₹1000 கோடியும், நமக்கு நாமே திட்டத்துக்கு ₹400 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அதை தொடர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி: அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 பேர் பயன்பெற்றனர். அந்த திட்டம் தொடர வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சூட்சுமம் எங்களுக்கு தெரியும் என்று தேர்தலுக்கு முன்பு கூறி வந்தீர்கள். அதை ரத்து செய்ய முடிந்ததா? அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு விவகாரத்தில், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பியதாக இங்கே சொல்கிறார். அதை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதையும் சொன்னால் சிறப்பாக இருக்கும். எஸ்.பி.வேலுமணி: அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை ரத்து செய்வதாக அறிவித்தோம்.

அமைச்சர் இ.பெரியசாமி: பயிர் கடன் வழங்கியது தொடர்பாக, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ₹12 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து சென்றுவிட்டீர்கள். இந்த ஆட்சியில்தான் ₹5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: