பீஸ்ட்: இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம்: நெல்சன் திலீப் குமார் பேட்டி

சென்னை: விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம் என இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறினார். சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் பீஸ்ட். விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார், கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: இது விஜய்க்காகவே நான் எழுதிய கதை. அவரை மனதில் வைத்துக் கொண்டே உருவாக்கிய கேரக்டர். ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டது. குறிப்பாக விஜய் படங்களில் அதிகமான பாட்டுகள் இருக்கும்.

இதில் பாட்டுகள் குறைவாக இருக்கும். கதை ஒரே இடத்தில் நடக்கும். குறிப்பிட்ட கால அளவிற்குள் நடக்கும். ஆனால் அதற்குள்ளும் சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் சரியான விதத்தில் சேர்க்கப்பட்டு பக்கா பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் டிரைலர் பார்த்து விட்டு ஹாலிவுட் படம் மாதிரி இருப்பதாக பலரும் பாராட்டினார்கள். அது உண்மைதான், இதனை இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம் என்று சொல்லலாம். விஜய்யின் ஆக்‌ஷனும், ஸ்டைலும் அந்த அளவுக்கு இருக்கும். விஜய் இயல்பில் எப்படி இருப்பாரோ அதையே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறேன். 60 சதவீதம் ஆக்‌ஷன் 40 சதவீதம் காமெடி. இதுதான் படத்தின் மேக்கிங் பார்முலா.

இந்த படம் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு ஷாப்பிங் மாலில் நடக்கும் ஹைஜாக் கதை. இதற்காக இந்தியா முழுக்க பொருத்தமான ஷாப்பிங் மால் தேடினோம். கிடைக்கவில்லை. விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை கொண்டு மக்கள் நடமாட்டமிக்க ஷாப்பிங் மாலில் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால், ஷாப்பிங் மால் ஒன்றை 5 மாதமாக கடுமையாக உழைத்து உருவாக்கினோம். நிஜமான மால் போலவே அது அமைக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தால்தான் இது சாத்தியமாயிற்று. இவ்வாறு நெல்சன் கூறினார்.

Related Stories: