அரசு பள்ளி சுற்றுச்சுவர் மீது லாரி மோதி விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே சீக்கினாங்குப்பம் கிராமம் ஈசிஆர் சாலையையொட்டி அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து வேகமாக சென்ற ஒரு டிப்பர் லாரி, அங்கு சாலையோர அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி லேசாக இடிந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையறிந்ததும், கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே திரண்டனர். அப்போது, குறுகிய வளைவான பகுதியில் பள்ளி இயங்குவதை அடையாளப்படுத்தும் வகையிலும், வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்கவும் அப்பகுதியில் தடுப்புகள் மற்றும் வேகத்தடை, அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: