சென்னையில் வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் ரூ.250 கோடியில் பணிகள்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் முதல் கட்ட பணிகளுக்கு ரூ.250 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பின்பு, அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்: சென்னை மாநகரில், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு உப வடிநிலங்களில், போரூர், புழல், செம்பரம்பாக்கம், வெள்ளிவாயல், மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க 8 வெள்ளத் தடுப்பு பணிகள் அமைக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியில் இருந்து ராமாபுரம் ஏரி வரை மூடுகால்வாய் அமைக்கும் பணி; பள்ளிக்கரணை அணை ஏரி முதல் சதுப்பு நிலம் வரை பெரிய மூடுகால்வாய் அமைக்கும் பணி, கொளத்தூர் ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, உபரி நீர்க் கால்வாயை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கோவளம் உபவடி நிலத்தில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க 4 வெள்ளத் தடுப்புப் பணிகள் 2-ம் கட்டமாக நடத்தப்படும்.

திருச்சி மண்டலத்தில் காவிரி முறைபாசனப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்பாக செயலாக்கப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் போல, கோவை மற்றும் மதுரை மண்டலங்களில் உள்ள ஆற்று அமைப்புகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 200 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் அடிப்படையில் செப்பனிடுதல், புதுப்பித்தல், புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூ.200 கோடியில் மேற்கொள்ளப்படும்.  காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 5 இடங்களில் புதிய அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

தென்காசி, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 3 புதிய நிரொழுங்கிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 3 இடங்களில் நிலத்தடி நீர்ச்செறிவை அதிகரிக்க தரை கீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.  திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 15 இடங்களில் பாசனக் கட்டுமானங்களை புனரமைக்கும் பணிகள் ரூ.251 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அதன்படி, பொன்னேரி வட்டம் பெரும்பேடு குப்பம் அருகே ஆரணியாற்றின் இடதுபுறம் வெள்ளக்கரையில் நீர் உள்வாங்கி மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: