சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் கொட்டிய ஆயிலில் வழுக்கி விழுந்த வாகனங்கள்

புழல்: சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல், கதிர்வேடு சந்திப்பு பகுதியில் நேற்றிரவு ஏராளமான வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வாகனத்தில் இருந்து ஆயில் சாலையில் கொட்டியுள்ளது. இதை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் சென்றுக்கொண்டிருந்தனர். இதனால் மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி சென்ற 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சாலையில் வழுக்கி விழுந்ததில் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் சென்று ஆயில் மீது மணல் பரப்பியதுடன் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை  தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புழல் போக்குவரத்து போலீசார் வந்தனர். அவர்களும் அங்கிருந்து மணல் மூட்டைகளை கொண்டு வந்து சாலையில் கொட்டி ஆயிலை அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இதுபோல் சம்பவம் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து போலீசார்  நின்றால் இந்த விபத்துக்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நிற்பது இல்லை.  இதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றனர். இதனிடையே விபத்து சம்பந்தமாக கேள்வி எழுப்பியதால் போக்குவரத்து போலீசாருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உயரதிகாரிகள் வந்து சமரசப்படுத்தினர். இனிமேல் இதுபோல் விபத்து நடக்காமல் இங்கே போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்

Related Stories: