இரவு முழுவதும் பணி செய்ய வைத்த கொடுமை பண்ருட்டி கிளை சிறையில் தகராறு: காவலர் மீது தலைமை காவலர் சரமாரி தாக்குதல்-சிறைச்சாலை மேற்பார்வையாளர் நேரில் விசாரணை

பண்ருட்டி : பண்ருட்டி கிளை சிறையில் பெயிலில் கைதியை விடுவதில் ஏற்பட்ட தகராறில் காவலர் மீது தலைமை காவலர் சரமாரி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள கிளை சிறைச்சாலையில் பண்ருட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்றங்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அடைக்கப்பட்ட சிறைக் கைதிகளை கண்காணிப்பதற்காக தனித்தனியாக காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வழக்கு சம்பந்தமாக ஒருவர் பெயில் ஆர்டர் எடுத்துக்கொண்டு கிளை சிறைச்சாலைக்கு வந்திருந்தார்.

பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் சதீஷ்குமார் ஆர்டரை பெற்றுக்கொண்டு உள்ளே சென்றிருந்தார். அப்போது முதல் தலைமை காவலராக உள்ள ராஜகோபால் என்பவர் பெயில் ஆர்டர் கொண்டு வந்த உறவினரையும் உள்ளே விட வேண்டும் என கூறவே பதிலுக்கு, இது தவறான வழியாகும். நான் அவரை உள்ளே விட மாட்டேன் என இரண்டாம் நிலை காவலர் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 ஆத்திரமடைந்த தலைமை காவலர் ராஜகோபால், உன்னால் தான் எனக்கு வருமானம் வரவில்லை என கூறி சாவியை பறித்து உள்ளார். நேற்று முன்தினம் (ஞாயிறு) சதீஷ்குமார் பணிக்கு வந்த போது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இன்று நான் தலைமை பொறுப்பில் உள்ளேன். உன்னை ஒழித்து கட்டுகிறேன் பார் என கூறி அசிங்கமாக திட்டி, லத்தியால் சதீஷ்குமாரை ராஜகோபால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

காயம் அடைந்த காவலர் கிளை சிறையின் மேற்பார்வையாளருக்கு நடந்த சம்பவம் குறித்து தொலைபேசியில் தெரிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு செல்ல முயன்றார். அப்போது, தடுத்து நிறுத்தி   பணியில் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால், இரவு முழுவதும் வலியால் துடித்துக் கொண்டிருந்த காவலர் இரவு முழுவதும் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

 இதுகுறித்து பண்ருட்டி சிறைச்சாலை மேற்பார்வையாளர் நேரில் வந்து விசாரணை நடத்தி, கடலூர் மாவட்ட மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதன் பேரில் சதீஷ்குமார் கடலூருக்கு அழைத்து வரப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்து சதீஷ்குமார் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார்  தீவிர மாக விசாரித்து வருகின்றனர். கிளை சிறைச்சாலையில் காவலர் ஒருவரை தலைமை காவலரே லத்தியால் தாக்கிய சம்பவம் பண்ருட்டியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: