விவசாய கிணறு அபகரிப்பு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை

விழுப்புரம் :  போலி ஆவணங்கள் மூலம் விவசாய கிணற்றை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மோகன் மற்றும் துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்தனர். அப்போது, மனு அளிக்க வந்த தாய், மகள் இருவரும் தங்களது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வானூர் அருகே அம்புலுக்கை கிராமத்தை சேர்ந்த வைகுண்டவாசன் மனைவி சரஸ்வதி (48), அவரது மகள் கீர்த்தனா என்பது தெரியவந்தது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சரஸ்வதி கூறுகையில், எனது கணவரின் பெயரில் 2 அரை ஏக்கர் நிலம் உள்ளது. நாங்கள் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்திலேயே விவசாய கிணறு ஒன்று உள்ளது. எனது கணவரின் அறியாமையை பயன்படுத்திய எனது உறவினர் ஒருவர், எங்கள் கிணற்றுக்கு மின் மோட்டார் இணைப்புக்கான சர்வீஸ் வாங்கித்தருவதாக கூறி அவர், போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து அபகரித்துக்கொண்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் எங்களை மிரட்டி வருகிறார். மேலும், அந்த கிணற்றை நாங்கள் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எங்களை விரட்டியடித்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பின்னர், போலீசார், ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: