கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அதிசய பொன்னி நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் அதிசய பொன்னி நெல் கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இப்பகுதிகளில் சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு கோடை குறுவை நடவு பணி நடைபெற்று வரும் வேளையில் அனேக விவசாயிகள் அதிசய பொன்னி நெல் கதிர்களை அறுவடைக்கு தயாராகி வருகிறார்கள்.
இதனை பற்றி விவசாயிகள் கூறும்போது, நமது பகுதியை பொறுத்தவரை நெல் பயிர் நடவு பட்டம் என்பது மாறி எப்போழுது வேண்டுமானாலும் நெல் நடவு செய்யலாம். அதற்கு தேவையான நீர் பாசன குளங்களிலும், ஆழ்துளை கிணற்றில் இருந்தால் போதுமானது. நெல் நாற்றங்காலில் பாவி 40 தினங்களில் பறித்து உழவு செய்த நிலங்களில் நடவு செய்தால் 80 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் கதிர்விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடும்.
நெல் சாகுபடியை பொறுத்தவரை குறுகிய காலத்தில் நல்ல மகசூல் தரும் விவசாயம் என்றும், விற்பனையை பொறுத்தவரை இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவிடலாம் என்று கூறினார்.