புதர் மண்டி கிடக்கும் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம்: பொதுப்பணித்துறையினர் கவனிப்பார்களா?

சின்னாளபட்டி: கன்னிவாடி நாயோடை நீர்தேக்கத்தில் முட்செடிகள், மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அவற்றை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கன்னிவாடி நாயோடை நீர்தேக்கம். 41 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து இருக்கும். இந்த நீர்த்தேக்கத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, கன்னிவாடி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால் ஆத்தூர்  பகுதியில் ராமக்காள், ஆனைவிழுந்தான் ஓடை நீர்த்தேக்கமும், கன்னிவாடியில் நாயோடை நீர்த்தேக்கமும் கொண்டு வரப்பட்டு, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அதிமுக ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக கன்னிவாடியில் நாயோடை நீர்த்தேக்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நீர்த்தேக்கம் முழுவதும்  புதர்மண்டி கிடக்கிறது. நீர்த்தேக்கத்தின் மதகு வரை செல்லும் சாலை பிளவுபட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

நீர்த்தேக்கத்தை முறையாக தூர்வாராததால், கழிவுநீர் குட்டை போல் நீர்த்தேக்கம் உள்ளது. மேலும் மதகு பகுதிகளை முறையாக சீரமைக்காததால், தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது தண்ணீர் வெளியேறுவதை தடுப்பதற்கு, அப்பகுதியில் மணல்மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கன்னிவாடி பகுதி மக்கள் நலன் கருதி, பராமரிப்பின்றி உள்ள இந்த நீர்தேக்கத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: