காங்கேயம் அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் திருப்பூர் நிதி நிறுவன அதிபர் தீயில் கருகி பலி

திருப்பூர் : காங்கேயம் அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த நிதி நிறுவன உரிமையாளர் தீயில் கருகி பலியானார்.ஊட்டியில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் மாலை பஸ்சில் 20 பேர் வந்தனர். இவர்களது பஸ், இரவு 11.15 மணி அளவில் காங்கேயம் படியூர் பகுதியில் சம்பந்தம்பாளையம்பிரிவு அருகே வந்த போது, காங்கேயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதின. தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

பஸ்சில் இருந்தவர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இதற்கிடையே இந்த விபத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரை ஓட்டி வந்தவர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் தீயில் கருகி அவர் பலியானார். இத்தகவலறிந்த காங்கேயம் போலீசாரும், தீயணைப்பு தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். காங்கேயம் போலீசார் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பலியானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் பலியானவர், திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த போஸ்மணி (45) என்பதும், நிதி நிறுவன உரிமையாளர் என்பதும், முத்தூருக்கு சென்று விட்டு போஸ்மணி திருப்பூர் திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த 20 பேரும் உயிர் தப்பினர்.

Related Stories: