அந்தமான் அருகே காற்றழுத்தம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தற்போது படிப்படியாக வெயில் குறைந்த சராசரியாக 100 டிகிரி அளவுக்கு வந்துள்ளது. வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடியலேசான மழை பெய்தது.  

இது தவிர தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடியகனமழையும் பெய்தது. அதில் அதிகபட்சமாக  தேவக்கோட்டையில் 80 மிமீ, அம்பாசமுத்திரம் 60மிமீ, பேச்சிப்பாறை, தஞ்சாவூர் 40மிமீ, கும்பகோணம்,சிற்றாறு 30மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி காற்றழுத்தமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 50கிமீ வேகத்தில் சுறாவளிக் காற்று வீசும். இடையிடையே 60 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Stories: