கோயம்பேடு மார்க்கெட்டில் துணிப்பைக்கு மாறிய பூ வியாபாரிகள்: பெண் ஐஏஎஸ் அதிகாரி பாராட்டு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, தற்போது பூ வியாபாரிகள் துணிப் பைகளுக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றத்துக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ விற்பனை அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளை பெரிதளவில் வியாபாரிகள் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக  முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் 3 குழுவினர் அதிகாலை நேரங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு மற்றும் விற்பனை உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தி, இதுவரை பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை உபயோகத்தில் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 12க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. அந்த கடையின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பனை வளாகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து கடைகளிலும் துணிப்பைகளை வியாபாரிகள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து நேற்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக்கை தவிர்த்து வியாபாரிகள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் சுப்ரியா சாகு ஐஏஎஸ் வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மார்க்கெட் நிர்வாக முதன்மை அலுவலர் சாந்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் காய்கறி, உணவு தானியம், பழ மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகளும் துணிப்பைகளை மட்டுமே பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி வலியுறுத்தினார்.

Related Stories: