டெல்லியில் தலைநிமிரும் திராவிட கோட்டை: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்லியில் தலைநிமிரும் திராவிட கோட்டையை கண்டு நான் உவகை அடைகிறேன் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐந்து நாட்கள் அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப் பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து, திணறி திக்குமுக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்புகனிந்த மரியாதையைப் பெற்று, துபாய்-அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன். 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய, 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக, தாயுள்ளம் கொண்ட தமிழ்நாட்டு மக்களிடம் தெரிவித்து மகிழ்ந்தேன்.

முதல்வர் என்ற முறையில் முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அரசியலுக்காக ஒருசிலர் அதை ஏற்காமல், அழுக்காறு மேலிட்டு, வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பினாலும், அவர்களின் மனசாட்சிக்கும் உண்மை நிலவரம் நன்றாகவே தெரியும். வெற்றியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டால், பிறகு எப்படி அவர்கள் அரசியல் கடை போட்டு, கூவிக் கூவி பிழைப்பு நடத்த முடியும்? அவர்களால் பாராட்ட முடியாவிட்டாலும், நடுநிலை பத்திரிகைகள், ஊடகங்கள் பாராட்டுகின்றன.   துபாயில் வெளியாகும் ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆங்கில ஊடகங்கள் பலவும் இந்தப் பயணத்தைப் பதிவு செய்துள்ளன. அமீரகத்தில் மேற்கொண்ட 5 நாள் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தமிழ் நாளிதழ் ஒன்று படம் பிடித்துக் காட்டும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. “இதுவரை எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும், தலைவர்களும் துபாய்க்கு வந்தபோதுகூட இல்லாத வரவேற்பு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சருக்கு கிடைத்திருப்பது அனைவரையும் பிரமிக்கச் செய்துள்ளது.

 நாட்டின் தலைவர்களுக்கு உண்  அடுத்த பயணம் டெல்லியை நோக்கி அமைகிறது. டெல்லிக்குச் சென்று அன்று பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  சந்திக்க இருக்கிறேன். தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்க இருக்கிறேன்.தமிழ்நாட்டில் திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை, வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது.  அதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, டெல்லிப் பட்டணத்தில் திராவிடக் கோட்டையாக உருவாகியுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2ம் நாள் திறக்கப்படுகிறது.    அறிவாலயம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, சென்னையில் உள்ள திமுகவின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம்தான்.

ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம். திமுகவிற்காக 1972ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் அண்ணா சாலையில் வாங்கப்பட்டிருந்த 86 மனை (கிரவுண்டு) நிலத்தில் அண்ணா அறிவாலயத்தை அழகும் கம்பீரமுமாக அமைத்தார். கலைஞர் சிந்தனையில் உருவான கட்டிடங்கள் போலவே, 3 தளங்களைக் கொண்ட டெல்லி அறிவாலயமும் திராவிடக் கட்டிட அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ளது. உயரமான நான்கு தூண்களைக் கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா-கலைஞர் இருவரது மார்பளவு சிலை, திமுக நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நிர்வாகிகள் தங்குவதற்கான அறை என முத்தமிழறிஞரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா - கலைஞர் அறிவாலயம் அழகுற அமைந்துள்ளது.

 தமிழ்நாட்டில் திமுக கிளை அமைந்துள்ள இடங்களில் சொந்தமாக கட்டிடம் கட்டி, அதன் ஒரு சாவியைத் தன்னிடம் தர வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணாவின் விருப்பம். பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது ஓட்டலில் தங்காமல், திமுக அலுவலகத்தில் தங்கி, தனது தம்பிகளுடன் உரையாடவேண்டும் என்பது அவர் எண்ணம். பேரறிஞர் அண்ணா மறைந்தாலும் அவர் எண்ணம் மறைந்துவிடாதபடி சென்னையில் அவர் பெயரில் அறிவாலயம் அமைத்தார் கலைஞர்.  அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் சொந்தக் கட்டிடங்கள் அழகுடனும் வசதியுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்தியாவின் தலைநகரம் டெல்லியா, சென்னையா என்று வடபுலத்து தலைவர்கள் கேட்கும் வகையில், இந்திய அரசியலில் பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கிடும் ஆற்றல் மிக்க தலைவராக விளங்கியவர் கலைஞர். அந்த அண்ணாவும் கலைஞரும் இன்று நம்மிடையே இல்லை. பேராசிரியர் பெருந்தகை இல்லை. தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் இல்லை. எனினும், அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், டெல்லிப் பட்டணத்தில் அறிவாலயம் அமைந்திருக்கிறது. ஏப்ரல் 2ம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கலைஞர் மீது அளவற்ற மரியாதை கொண்டவருமான சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.இந்திய ஒன்றிய அரசியலில் திமுக, அதன் கொள்கைகளை செயல் வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது. உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன். பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம்.

Related Stories: