2வது திருமணம் செய்ததாக புகார் எதிரொலி: போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் அக்காளுடன் தம்பி தற்கொலை முயற்சி

ஊட்டி: முதல் மனைவி கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்ததால் ஊட்டியில் தம்பி, அக்காளுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். நீலகிரி மாவட்டம் கேத்தி பாரதி நகரை சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் திருப்பூர் மாவட்டம் பல்லத்தை சேர்ந்த புஷ்பநாதனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதி பல்லடத்தில் வசித்து வந்தனர். திருமணமான 2 மாதத்தில் வினோதினியை அவரது பெற்றோர் வீட்டில் புஷ்பநாதன் விட்டுச்சென்றார். அதன்பின்னர் அவரை அழைத்துச்செல்லவில்லை.

இதனையடுத்து வினோதினி மற்றும் குடும்பத்தினர் புஷ்பநாதன் குறித்து விசாரித்தனர். அப்போது புஷ்பநாதன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததும், அவர்களுக்கு 3 மாத குழந்தை இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஊட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், ‘‘புஷ்பநாதன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்துள்ளார். சட்டப்படி நான்தான் மனைவி. என்னுடன் புஷ்பநாதனை சேர்த்து வைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் பல்லடம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் வினோதினி மற்றும் அவரது தம்பி குருபிரசாத் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

அப்போது, ‘‘உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அதனால் பல்லடத்துக்கு வாருங்கள். வரவில்லை என்றால் உங்களை கைது செய்வோம்’’ என்று அந்த அதிகாரி மிரட்டியதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியின் மிரட்டலுக்கு அக்காள், தம்பி இருவரும் பயந்தார்கள். இதனால் விரக்தியடைந்த இருவரும் நேற்று வீட்டில் விஷம் குடித்தனர். மயங்கி கிடந்த அவர்களை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: