கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் ரூ.3.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: நெல், வேர்க்கடலை பயிர்கள் அழிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையில் ரூ.3.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளது. இங்கு மழைக்காலத்தின்போது ஏரிகளுக்கு மழைநீர் வரும்போது ஏரி நிலத்தை ஆக்கிரமித்து சிலர் நெல், வேர்க்கடலை மற்றும் எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வந்தனர். இதனால் ஏரிக்கு செல்லவேண்டிய உபரிநீர் தடைபட்டு ஆங்காங்கே வீணாக சென்றது. இதனால் காரணி, கண்ணன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கவேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராமன் தலைமையில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் காரணி, கண்ணன்கோட்டை, மாதர்பாக்கம் பகுதியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரிகளில் பார்வையிட்டனர். அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து வேர்க்கடலை, நெல் உள்ளிட்ட பயிர்கள் சுமார் 35 ஏக்கர் பரபரப்பில் விவசாயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயம் செய்து வந்த நிலங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடி. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வட்டம் வேளகாபுரம், திருக்கண்டலம், கச்சூர், செங்கரை ஆகிய கிராமங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் சுமார் 5 ஏக்கரில் பயிர் மற்றும் முள்வேலி மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தை மீட்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்பேரில், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: