முதல்வருக்கான ஆலோசனை குழு உறுப்பினர் எஸ்தர் டப்லோ முதல்வருடன் சந்திப்பு: தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு

சென்னை: முதல்வருக்கான ஆலோசனை குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் திட்டங்களை பாராட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ சந்தித்து பேசினார். அப்போது, கொள்கை முடிவுகளுக்கும், அரசு முதலீடுகளுக்கும் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையை பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலையான உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.

மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை சீர்திருத்துவதற்கான பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தியமைக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு, குறிப்பாக தனியாக வாழும் முதியோர்களுக்கு வலுவான பாதுகாப்பு வலையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை  ஒரு முன்னோடி முயற்சி என்று பாராட்டினார். ஏழைகள் , முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொணர அடுத்த 8 ஆண்டுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்படும், இப்பிரச்னைகளுக்கான கொள்கை தீர்வுகளை உருவாக்க இது பயன்படும் எனவும் குறிப்பிட்டார். இத்தகைய முயற்சிகளுக்கும், மாநிலத்தின் சமூக பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு அரசு எப்போதும் தனது முழு ஆதரவை நல்கும் என முதல்வர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர்  முருகானந்தம், ஜெ-பால் தொண்டு நிறுவன குளோபல் செயல் இயக்குனர் இக்பால் தாலிவால், ஜெ-பால் தெற்கு ஆசிய தொண்டு நிறுவன செயல் இயக்குனர் ஷோபினி முகர்ஜி, இயக்குனர் (திட்டம், பயிற்சி மற்றும் தொடர்பு) குணால் சர்மா உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.எஸ்தர் டப்லோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: