சீர்திருத்த குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழகத்தில் சீர்திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த  குழுவினர் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் நடந்த 2022ம் ஆண்டுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு தொடக்க விழாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. விழாவில், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தனர்.

அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளதால் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பயிற்சி  முகாம் சிறப்பாக நடக்கிறது. கல்வியின் மூலம் மனித வள மேம்பாடு என்பது மட்டுமல்லாமல் பாரம்பரியம், இலக்கு, லட்சியம், ஆகியவை நிர்ணயிக்க இந்த பயிற்சி முகாம் வழிவகையை செய்கிறது. தமிழக அமைச்சரவையில் நான் கேட்ட துறையை காட்டிலும் கேட்காமலேயே  சிறந்த துறையான மனித வள மேலாண்மை துறையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு வழங்கியுள்ளார்.  

நிதித்துறையை காட்டிலும் மிக முக்கியமான துறையாக நான் பார்ப்பது மனித வளத்துறையைத்தான். தமிழகத்தில் துறைவாரியாக வளர்ச்சிகளை பெறுவதற்கு  தொழில் நுட்ப ரீதியாக  பல்வேறு முன்னெடுப்புகளை இருந்தாலும் மனித வள மேம்பாட்டு துறை என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்றும் சுமார் 300 ஐஏஎஸ் அதிகாரிகளே உள்ளனர். திறமையானவர்களை தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, மேம்படுத்துவது குறித்த மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, சீர்திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு 6 மாதங்களில் தங்கள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும். திராவிட கட்சிகளின் கொள்கைப்படி மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின கல்வியின் விளம்பு நிலைக்கு  கீழ் உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை அரசு துறையில் உயர் பதவி இடங்களுக்கு அழைத்து செல்லும் பணிகளை இந்த பயிற்சி முகாம் செய்து வருகிறது. 2021ம் ஆண்டு நடத்திய நேர்முக தேர்வு மூலம் 19 பேர் தேர்ச்சி பெற்று ஆட்சி பணிக்கு சென்றுள்ளனர். குடிமை பணிகளில் ஒரு காலத்தில் தமிழகம் சிறப்பாக இருந்தது. பல்வேறு காரணங்களால் சரிந்து விட்டது. இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Related Stories: