பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சென்னை ஐஐடி மாணவி: 3 முறை தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி; சிபிசிஐடி விசாரிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை ஐஐடியில் தலித் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பேராசிரியரிடம் புகார் தெரிவித்த போது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அவர் செயல்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாதர் சங்க அலுவலகத்தில், நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி கூறியதாவது: சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி 2017ம் ஆண்டு முதல் தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகார் செய்தபோது அவர், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடும் இப்பிரச்னையை அணுகியுள்ளார். கிங்ஷீக்தேவ் ஷர்மா அந்த மாணவியை கல்வி வளாகத்திலும், ஆய்வு கூட்டத்திலும் 2 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2021 ஜூன் 9ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒன்பது மாதம் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கு காவல் துறைக்கு சென்றதால் உள்கமிட்டி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தொடர்பு கொள்ள கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி மாணவி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகார் அளித்தார். சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* மாணவிக்கு முழு ஆதரவு: நிர்வாகம் தகவல்

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சென்னை ஐஐடி மாணவிக்கு, தங்கள் நிர்வாகம் அனுதாபத்தை தெரிவிப்பதோடு, முழு ஆதரவையும் அளிப்போம் என்று ஐஐடி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘இந்த விவகாரம் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மாணவியின் கூற்றுப்படி, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், ஆகஸ்ட் 2020ல் ஐஐடி மெட்ராஸின் கவனத்திற்கு கொண்டு வந்தன. நிறுவனம் உடனடியாக இந்த விஷயத்தை விசாரணைக்கு அனுப்பியது.

விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். அவரது உதவித்தொகை காலம் முடிவடைந்த பின்னரும் கூட, வெளி விசாரணையின்போது, நிறுவனம் அவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளது. மாணவி தொடர்ந்து வளாகத்தில் தங்கி இருக்கிறார். மேலும் அவர் தனது பட்டப்படிப்பை முடிக்க தேவையான அனைத்து ஆதரவையும் நிறுவனம் வழங்குகிறது. நாங்கள் அந்த மாணவியிடம் அனுதாபம் கொள்கிறோம். இதன் மூலம், அவருக்கு ஆதரவளிப்போம். பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை எழுப்பிய மாணவியின் விவகாரத்தை விசாரிப்பதற்கான அனைத்து செயல்முறைகளையும் ஐஐடி மெட்ராஸ் பின்பற்றியுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: