அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.927 கோடி பயன்படுத்தப்படாத அவலம்: ஆர்டிஐ தகவலால் அம்பலம்

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதி ரூ.927 கோடி பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி ஒப்படைக்கப்பட்ட தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

 தமிழக பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பின் போது, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2011-12 முதல் 2020-21 வரையிலான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்களின் விபரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம்  மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.927 கோடியே 61 லட்சத்து 68 ஆயிரம் நிதி செலவு செய்யாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் (ஆர்டிஐ) பெற்றுள்ளார்.  

இதன்படி, கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.15,192 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.14,264 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் ரூ.927 கோடி வரை பயன்படுத்தப்படாமல், அரசு கஜானாவிற்கு திரும்ப ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டான 2020-21ல் ரூ.3,552 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் திட்டங்களுக்கு செலவு செய்தது போக ரூ.249 கோடியே 67 லட்சம் பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கு திரும்ப சென்றுள்ளது.

சமூக ஆர்வலர் கார்த்திக் கூறும்போது, ‘‘கடந்த ஆட்சி காலத் தவறுகள் மிகுந்த கவலையளிக்கிறது. தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு  ஒதுக்கிய ரூ.4,281 கோடி நிதியை, முழுமையாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தாத ரூ.927 நிதியை மீண்டும் அத்துறைக்குவழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: