திருப்போரூர், திருக்கழுக்குன்றத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: திருப்போரூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப் பணிகளை இன்று காலை 6.15 மணியளவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் கடற்கரைக்கு வந்த தலைமைச் செயலாளர் இறையன்புவை, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வரவேற்றார். பின்னர் அங்கு நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் பொழுது போக்குப் பூங்கா, உணவகம் ஆகியவற்றை இறையன்பு பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, செம்பாக்கம் கிராமத்தில் இருளர், பழங்குடி மக்களின் குடியிருப்பை சுற்றிப் பார்த்தார். அங்கு மகளிர் சுயஉதவி குழு பெண்களால் பராமரிக்கப்படும் சமூகக்காடு திட்டத்தையும் கேட்டறிந்தார். இதையடுத்து, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புல்லேரி ஊராட்சி, பெரியார் நகரில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை இன்று காலை 9 மணியளவில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அங்கு கொள்முதல் நிலைய இயக்கம், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அங்கிருந்த நெல்லை கையில் எடுத்து பரிசோதித்தார். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் இறையன்பு பேசினார்.

பின்னர் தண்டரை ஊராட்சியில் வனத்துறை சார்பில் அமைந்த மூலிகை பண்ணை, இருளர் சொசைட்டி மூலம் அமைந்துள்ள மூலிகை பண்ணை ஆகியவற்றை தலைமை செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், தாசில்தார் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் துரை வேலு, தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன்,

புல்லேரி ஒன்றிய கவுன்சிலர் கெஜலட்சுமி செல்லப்பன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், துணை தலைவர் மோகனா இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செங்கல்பட்டு சென்ற தலைமை செயலாளர் இறையன்பு மழைநீர் கால்வாய், அரசு மருத்துவ மனை உள்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கோட்டாட்சியர் (பொறுப்பு) சஜீவனா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: