திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பல்லாவரம்: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா, கடந்த 19ம் தேதி தொடங்கி, 11 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிம்ம வாகனம், அம்ச வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், கருடசேவை யானை வாகனம் என தினசரி ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், காலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முதலில் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில், சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories: