குமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் நடந்த செல்வதற்கு கண்ணாடி தரைத்தளம் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்த செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தளம் அமைத்து ஓரு வருடத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்  துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு, தகவல் கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ஏதுவாக திருவள்ளுவர் சிலை முதல் அதன் வலது பக்கத்திலிருந்து எதிரே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையில்  கண்ணாடி இழை தரைத்தள நடைப்பாதை அமைப்பது குறித்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்  துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த்,  நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (26.03.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உலகமே போற்றுகின்ற விதத்திலே கன்னியாகுமரி கடலின் நடுவிலே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையினை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வழிவகை செய்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் திருவள்ளுவர் சிலையை பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், டாக்டர் கலைஞர் அவர்களின் நல்வழியில் ஆட்சிப்புரிந்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையினை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை வகுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டமானது அணைகள், கடற்கரை பகுதிகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள்.  மேலும், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுவாக சுற்றுலா பயணிகள் நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து பார்த்துவிட்டு  செல்லும் நிலைதான் இருந்தது. படகின் காலம், நேரம் கருதியும், படகை இயக்குவதற்கான இடைப்பட்ட பொருளாதார விரயத்தை கருத்தில் கொண்டும், மத்திய, மாநில அரசு இதற்கு பாலம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், 140 மீ 7 1/2  மீட்டர் அகலத்தில் பாலத்தை அமைக்கலாம் என்று கடந்த அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு 140 மீ என்பது பொருளாதார விரயம் அகும். எனவே, விவேகானந்தர்  பாறை முதல் திருவள்ளுவர் சிலை இணைக்ககூடிய  பாலத்தினை 72 மீட்டரிலே இணைக்க முடியும், அதனடிப்படையில் தலைமைப்பொறியாளர் திரு.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் குழு அமைத்ததில்,  72 மீட்டரிலே அமைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட IIT துறையினரை நான் அணுகி  அவர்களின் ஒப்புதல் பெற்றபின், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் ரூ.37 கோடி மதிப்பில் 72 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில்  பாலத்தினை அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்கள். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் செல்லும் போது முக்கடலின் அழகினை பார்க்க வேண்டுமென்ற அடிப்படையிலும், கடலின் சீற்றத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும்  ஏற்படாத வகையிலும் கடின தன்மை கொண்ட கண்ணாடி அமைக்க வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு  தயார் செய்யப்பட்டு,  தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரையில் 30 நாட்கள் தான் டெண்டர் விடப்படும், ஆனால் பாலம் அமைக்கும் பணிக்கு நாங்கள் 45 நாட்கள் டெண்டர் விட காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு  காரணம் சமூக நோக்கத்துடன் தரமான பாலம் அமைப்பதற்காக நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலம் அமைப்பதற்கான டெண்டர் முடிவுக்கு வந்த ஓராண்டிற்குள் இந்த பாலத்தினை முடிக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களும் பாலத்தினை விரைந்து கட்ட வேண்டுமென என்னிடம் தொடர்ந்து பலமுறை வேண்டுகோள் வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், ஓராண்டிற்குள் பாலத்தின் பணிகள் நிறைவடைந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பாலம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்  துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண் பிரசாத்,  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார்,  தலைமைப்பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சந்திரசேகர், தலைமைப்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்என்.சுரேஷ்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின், ராஜன்,  கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், வட்டார வேளாண்மை ஆலோசனைக்குழு தலைவர் தாமரைபாரதி, அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் மதியழகன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.அழகேசன், முனைவர்.பசலியான், வழக்கறிஞர் ஜீவா, குட்டிராஜன் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: