காட்பாடி போலீசாரின் 2வது நாள் ரெய்டு அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்-தேனி ஆசாமிகள் 2 பேர் கைது

வேலூர் : ஆந்திர மாநிலத்தில் இருந்து காட்பாடி, வேலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ரயில்களிலும், பஸ்களிலும் கடத்தி வரப்படும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரும், ரயில்வே போலீசாரும், உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசாரும், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அவ்வபோது கைப்பற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்பாடி வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதால், கஞ்சா கடத்தல் ஆசாமிகள் நூதனமான வழிகளில் அவற்றை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக முதலில் ரயிலிலும், பின்னர் பஸ்சிலும் என மாறி, மாறி போதை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், வேலூர் மாவட்டத்தில் மாநில எல்லை சோதனை சாவடிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுழற்சி முறையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை எல்லை சோதனை சாவடியில் காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ்சை சோதனையிட்டபோது 34 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தேனி மாவட்டம் ஜெகநாதன்பட்டியை சேர்ந்த லட்சுமணன்(50) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்று அதிகாலை 3 மணி முதல் காட்பாடி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காலை சுமார் 8 மணியளவில் திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அமர்ந்திருந்த 2 பேரிடம் இருந்த பைகளை சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் கம்மம் பகுதியை சேர்ந்த குமார்(43), ராஜா(50) என்று தெரிய வந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி ரயிலில் திருப்பதி வரை வந்து அங்கிருந்து பஸ் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: