×

உயிர் தானம் அறிவோம்

நன்றி குங்குமம் டாக்டர்

தானத்தில் சிறந்தது என்று அவரவர் கருத்தியலுக்கேற்ப ஏதேனும் ஒன்றைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறோம். சிலர் அன்னதானம் சிறந்தது என்பர். சிலரோ ரத்ததானம் சிறந்தது என்பர். சமீப காலமாக உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இவற்றில் நாம் பரவலாக அறிந்திராத உயிர் தானம் பற்றியும் தெரிந்துகொள்வோம்...

ஆண் அல்லது பெண் கருத்தரிக்க சிறிதும் வாய்ப்பு இல்லாமல் போகும்போது கருமுட்டை, விந்தணு, வாடகைத்தாய் இப்படி ஏதேனும் ஒன்றைப் பெற்று, கருத்தரிப்பு செய்து கொள்ளும் வழக்கம் உலக அளவில் நடைமுறையில் உள்ளது. பெண்ணுக்கு கருமுட்டைகள் உருவாகாத நிலையில், வேறு பெண்ணின் கரு முட்டையை தானமாக பெற்று, தனது கணவரின் உயிரணு மூலம் கருத்தரிக்க செய்து அதைத் தன் கருப்பைக்குள் வைத்து வளரச் செய்யலாம். இப்படி இல்லாமல் கணவருக்கு உயிரணுக்களே இல்லாத நிலையில் முகம் தெரியாத, மரபு குறைபாடுகள் இல்லாத யாரோ ஒருவரின் உயிரணுவை தானமாக பெற்று, கருப்பைக்குள் வைத்து வளர செய்யலாம்.

விந்து தானம்

கணவனுக்கு விந்தணுக்களே உற்பத்தியாக வாய்ப்பு இல்லாதபோது பிறருடைய விந்தணுக்களை தானமாக பெறும் நிலை ஏற்படுகிறது. விந்தணுவை தானமாக பெறும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மரபுரீதியான குறைபாடுகள், தொற்று நோய்கள் போன்றவை இல்லாத நபரிடமிருந்து பெறப்பட்டு, விந்து வங்கிகளில் சேகரித்து வைக்கப்பட்ட விந்தாக இருக்க வேண்டும். தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட விந்து வங்கிகளை அணுகி தகவல் பெறலாம்.

எப்போது விந்தேற்றம் செய்யலாம் என்பதை அல்ட்ரா- சவுண்டு, ரத்த பரிசோதனை போன்ற சோதனைகள் மேற்கொண்டு, சரியான தருணத்தை முடிவு செய்து, கருத்தரிக்க செய்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் விந்து தானம் பெறுவோர் தனது மதம், இனம், நிறம் ஆகியவற்றோடு ஒத்துள்ள ஆணின் விந்துவை தானமாக பெற்று கருவாக்கம் செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு தெரிந்த நபரின் விந்துவை தானமாக பெற்று குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

கரு முட்டை தானம்

சோதனைக்குழாய் முறையில் கருவாக்கம் செய்வதற்காகத்தான் முட்டை தானமாக பெற முடியும். வெளியே கருவாக்கம் செய்து, பிறகு அதை கருப்பைக்குள் பொருத்திக் கொள்ளலாம். இந்த முறையில் சினைப்பை முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள், கரு முட்டை உருவாகாத நிலையை உடைய பெண்கள், தனது சொந்த கரு முட்டைகள் கருத்தரிக்காமல் சிதைந்து போகும் தன்மை கொண்டவர்கள், பரம்பரை குறைபாடு உள்ளவர்கள், முட்டைகளை தானமாக பெற்று கருத்தரிப்பை சாத்தியமாக்கலாம்.

கரு முட்டையை தானமாக பெறும் பெண்ணின் கருப்பையை ஹார்மோன்களால் சுமார் மூன்று மாத காலத்துக்கு தூண்டி அதை சீர்படுத்த வேண்டும். அதன்பிறகு தங்கள் கணவரின் உயிரணுவோடு இணைக்கப்பட்ட வேறொரு பெண்ணின் சினை முட்டையை தனது கருப்பையில் பொருத்த செய்து கரு உயிரை வளர்க்கலாம். மாதவிலக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலை உடையபெண்ணுக்கு, முட்டைதானத்தால்கூட கருத்தரிப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாது.

கரு உயிர் தானம்

கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்ட பிறகு தேவை இல்லாமல் அதிகப்படியாக இருக்கும் கரு உயிர்களை பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவார்கள்.

கருமுட்டை தானம் பற்றிய சந்தேகங்கள்

* எனது கரு முட்டையை யாருக்குப் பொருத்துகிறார்கள் என்பதை சொல்வார்களா?

கண்டிப்பாகச் சொல்வார்கள். இவருடைய குணம் எங்களுக்கு பிடித்திருக்கிறது. இவருடைய முட்டையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என தானம் பெறுபவர் விரும்பினால் இவரிடம் இருந்து முட்டையை சேரிக்கலாம். தகுதி உள்ள தம்பதியரின் கரு முட்டைதான் தானமாக பெறப்படுகிறது. தகுதியானவர் என்று நாங்கள் குறிப்பிடுவது இனம், மொழி, மதம், உடலுறவுத் தன்மை போன்றவை. தானம் தரும் படிவத்தில் இவை பற்றிய குறிப்புகள் கேட்கப்பட்டிருக்கும்.

* எத்தகைய சூழல்களில் கருமுட்டைகள் தானமாக பெறப்படுவதில்லை?

கருத்தரிக்கும் வாய்ப்பும் கரு நிலைத்திருக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும் என்பதால், வயது முதிர்ந்த பெண்ணிடம் இருந்து பெறப்படும் கரு முட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு அல்லது அதற்கு குறைவாக இருந்தால், கரு முட்டையைத் தானமாக பெற முடியாது. பரம்பரை குறைபாடு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களது கரு முட்டையை தானமாக பெற முடியாது. தகுதி குறைவான கரு முட்டையைத் தானமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

* நாங்கள் கரு முட்டை தானம் செய்ய சென்றால் வேறு ஏதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட நேரிடுமா?

கரு முட்டை தானம் செய்ய விரும்பினால் அதற்கான படிவத்தில் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். முட்டை பெறப்படும் சூழலில் ஹெப்படைட்டிஸ் கிருமிகள், எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை அறிவதற்கான ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். கட்டணம் எதுவும் உங்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது.

* கரு முட்டை தேவைப்படுவோருக்கு, எனக்கு உருவாகும் எல்லா முட்டைகளையும் கொடுக்க வேண்டுமா?

அப்படியெல்லாம் இல்லை. நல்ல தரமான இரண்டு மூன்று முட்டைகள் எடுப்பார்கள். உங்களுக்கு பரந்த மனப்பான்மை இருந்தால், அதிகமாக சினை முட்டை கூட கொடுக்கலாம்.

* பெரும்பாலானவர்கள், எதற்காக கரு முட்டையைத் தானமாக பெறுகிறார்கள்?

பெரும்பாலானவர்கள் குழந்தை இல்லாதவர்களாக தங்கள் வாழ்நாளை கழிக்க விரும்புவதில்லை. அதற்காக, தத்து எடுத்துக்கொள்வதற்கும் விரும்புவதில்லை. தத்து எடுப்பது என்பது அதிக செலவுள்ளதாகவும், யாருக்கோ பிறந்த குழந்தையைத்தான் வளர்ப்பதாகவும் நினைக்கலாம். தவிர பல இடங்களில் சிகிச்சைக்காக அலைந்து நாட்களை செலவிட்டு, பலன் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு. இவற்றை தவிர்க்கவும், தங்கள் வயிற்றில் தங்கள் கணவரின் உயிரணுவை கருவாக்கி சுமந்து பிறக்கும் குழந்தையை வளர்ப்பதில்தான் முக்கியத்துவம் செலுத்துகிறார்கள். இதனால் தத்து எடுப்பதைவிட கரு முட்டையை தானமாக பெறுகிறார்கள். கரு முட்டையை தானமாக பெறுவது, குழந்தையை விரைவாக பெற உதவும்.

* கருமுட்டை தானம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

கரு முட்டை தானம் கொடுக்க விரும்பினால் அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டை பெற்று, அது உங்களுக்கு உடன்பாடு என்றால் அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடலாம். உங்கள் கரு முட்டை தேவையான நபருக்கு பொருத்தப்படும். கருவாக்க சிகிச்சைக்கு வருவோர், கருவாக்க மருத்துவர் சொல்லும் எல்லாவிதமான ஆலோசனையும் கேட்டு நடக்க வேண்டும். நோய் பற்றித் தெரிந்துகொள்ளவும், அதை கட்டுப்படுத்துகிற, தீர்க்கும் வழிகளை அறிந்து கொள்ளவும் வேண்டும்.

தொகுப்பு: எம்.ராஜலட்சுமி

Tags :
× RELATED நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி!