சொந்த கட்சியின் 30 எம்பிக்கள் போர்க்கொடி எதிரொலி: பாக். பிரதமர் இம்ரான் கானின் அரசு தப்புமா? இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான  ஆளும்  கூட்டணிக்கு 179 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஆனால், இம்ரான் கானின்  கட்சியான பிடிஐ கட்சியை சேர்ந்த 30 எம்பிக்கள் கட்சியை விட்டு வெளியேறி  இஸ்லாமாபாத்தில் உள்ள சிந்து ஹவுஸில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே  பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 162 உறுப்பினர்களில் 152  உறுப்பினர்கள் கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தில் சபாநாயகரை முற்றுகையிட்டு  இம்ரான் கான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அரசுக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர். மேலும் அவையில்  நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்த கோரினர்.  எதிர்கட்சியின் 152 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்ததால், பிரதமர்  இம்ரான் கான் அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை  சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இருந்தும், தான் பிரதமர்  பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் வென்றால்தான், அவர் தொடர்ந்து பாகிஸ்தானின் பிரதமராக நீடிப்பார்.

இல்லையெனில் அவரது அரசு கவிழும் என்று பாகிஸ்தான் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தும், இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பும் அபாயம் உள்ளது. ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் ஆதிக்கத்தை காட்ட திட்டமிட்டுள்ளன. இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. மறுபுறம், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தனது உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: