ஏப்.25ம் தேதி குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: குன்றத்தூர் முருகன் கோயில், ஸ்ரீபெரும்புதூர் நாகேஸ்வரசுவாமி கோயிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்,  செல்வபெருந்தகை எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.2 கோடியில் விரைவாக நடந்து வருகிறது. இங்குள்ள குறுகிய மலைப்பாதையை அகலப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் பணிகள் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு ரூ.3.20 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள திருமண மண்டப பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி வருகிற ஏப்ரல் 25ம் தேதி  கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் சேக்கிழாருக்கு குருபூஜை அரசு விழாவாக நடைபெற உள்ளதால் சேக்கிழார் மணிமண்டபத்தை புனரமைக்கவும் ஆய்வு மேற்கொண்டோம். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாகேஸ்வரசுவாமி கோயில் பணிகள் ரூ.1.20 கோடி செலவில் நடைபெற உள்ளது. இக்கோயில் நுழைவாயில் கதவை மாற்றி தேக்கு மரத்திலான கதவுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோயிலுக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், கோயிலுக்கு வருமானத்தை பெருக்கவும் புதிய கடைகள் அமைக்கவும் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறைக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்கள் மற்றும் குடமுழுக்கு துவக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 9 மாதங்களில் 94 கோயில்களில் கும்பாபிஷேகம் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 80 தனியார் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இங்கு உண்மை நிலையை கண்டறிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

Related Stories: