அரசியல் என்று வந்து விட்டால் கதம்தான் பீகாரில் கூட்டணி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்களை வளைத்தது பாஜ: சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியானது

பாட்னா: பீகாரில் பாஜ., ஐக்கிய ஜனதா தளம், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சகானி அமைச்சராக உள்ளார். இவரது கட்சியில் 3 எம்எல்ஏ.க்கள் இருந்தனர். பீகாரின் போச்சாஹா தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் விஐபி சார்பில் கீதா தேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அதே தொகுதியில் பாஜ.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதனால், விஐபி வேட்பாளரை வாபஸ் பெறும்படி பாஜ கோரியது. அதை முகேஷ் சகானி நிராகரித்தார்.

இந்நிலையில், விஐபி. கட்சியின் 3 எம்எல்ஏ.க்களும் பாஜ.வுக்கு தாவி உள்ளனர். இதனால் சட்டமன்றத்தில் பாஜ.வின் பலம் 77 ஆக உயர்ந்து தனிப்பெரும் கட்சியாகி உள்ளது. இதுவரையில் 75 எம்எல்ஏ.க்களுடன் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம்தான் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இந்நிலையில், விஐபி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்களும் தங்கள் கட்சிக்கு வந்து விட்டதால், சட்டமேலவை உறுப்பினராக உள்ள முகேஷ் சகானியை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி பாஜ வலியுறுத்தி உள்ளது. இது குறித்து முகேஷ் கூறுகையில், ‘‘முதல்வர் நிதிஷ்தான் என்னை அமைச்சரவையில் சேர்த்தார். பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: