அரசு பள்ளிகளில் படித்து ஐடிஐ, பாலிடெக்னிக் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து அரசு ஐடிஐ மற்றும் அரசு தொழிநுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: தமிழகம் ஏழை மாநிலம் இல்லை, வளர்ந்த மாநிலம். தமிழகம் ஏழை மாநிலம் இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் கூற முடிவும். 52 சதவீதம் இளைஞர்கள் கல்லூரியில் சேருகிறார்கள். 90 சதவீதம் குடும்பத்தினரிடம் செல்போன் உள்ளது. ஊரக பகுதிகளில் 75 சதவீதம் பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். நகர் பகுதியில் 60 சதவீதம் பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். தமிழகத்தில் 66 சதவீதம் பேர் பைக் வைத்துள்ளனர். 50 சதவீதம் பேர் வீட்டில் குளிர்சாதன பெட்டி உள்ளது.

அதனால் தான் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்கிறோம். டாஸ்மாக் விற்பனைகள் அனைத்தும் ஒரே சிஸ்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஜனாதிபதி அல்லது கவர்னரிடம் போய் நின்று போய் விடுகிறது. இன்று வரை 19 மசோதாக்கல் நின்றுள்ளது. அப்படியெல்லாம் எதற்காக சட்டமன்றம்? மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட மாசோதக்களை அனுமதி கொடுப்பது தான் அவர்களின் கடமை. அவர்களால் செய்ய முடியாததை, இவர்கள் செய்கிறார்களே என்று நிறுத்தி வைக்கிறார்களா? இதை எல்லாம் திருத்த வேண்டும்.

பொது பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த மாணவிகள் அரசு கல்லூரியில் சேர்ந்தால் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மேலும், விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து அரசு ஐஐடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும். அதேபோன்று பேராசிரியர் அன்பழகன் பெயரில் அறிவிக்கப்பட்ட பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது கழிப்பறை கட்டவும் குறிப்பாக பெண்கள் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுவினர் வங்கிகளில் கடன் பெறுவது கடினமாக இருப்பதால், ஒவ்வொரு வங்கியுடனும் உறவை அதிகரித்து, பெண்கள் உதவி குழுக்கள் கடன் பெறுவதை கண்காணிக்கப்படும்.

மேலும், அரசு கல்லூரிகளில் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடியில் சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு, காமராஜர் மேம்பாட்டு திட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது. பட்டியலின மாணவர் விடுதியில் படிப்பவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் சென்னையில் உள்ள எம்.சி.ராஜா ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் 75,000 சதுரடியில் ரூ.40 கோடியில் சர்வதேச தரத்துடன் பட்டியலின மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிய விடுதி அனைத்து வசதிகளுடன் கட்டப்படும். கடந்த 10 மாத ஆட்சியில் முதல்வர் எங்களுக்கு தூணாக வழிகட்டியாக உள்ளார். இதனால் தமிழகத்தில் எதிர்காலம் மிகவும் ஒளிமயமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில்

சென்னையில் விமான நிலையம்-கேளம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். அதேபோன்று, கோவையில் மெட்ரோ ரயிலுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது. அடுத்ததாக நிதி சம்பந்தமான ஆலோசனை நடத்தப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மே மாதம் முடிவடையும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

* தினகரனுக்கு பாராட்டு

சட்டப்பேரவையில் நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டி உள்ளது. அதன்படி, தினகரன் பத்திரிகை, ‘தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என பாராட்டி உள்ளது’’ என்று கூறினார்.

Related Stories: