இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகளும் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு பகுதிக்கு செல்ல முயன்றனர். தொடர்ந்து விடாமல் விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் அந்தோணி லிவிங்ஸ்டன்(30), மெஜோ(40), மரியடேனிஸ்டன்(26), சியோன்(25), ராபர்ட் கிளைவ்(42), நிலன்(30), பிரான்சிஸ்(22), சந்தியா(25), கெல்மன்ராஜ்(27), சகாயசுபாஷ், ஜெபமாலை(23) மற்றும் கிளிஸ்டன்(25) ஆகிய 12 பேரை சிறை பிடித்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் 12 பேரும் நேற்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி வரும் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதால், கிளிநொச்சி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் மற்றொரு பகுதியில் மீன் பிடித்த மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் சதீஸ்(38), வேலாயுதம்(50), விசார்அலி(35) மற்றும் ராஜாகனி(58) ஆகியோரை, இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறை பிடித்தனர். அவர்களுக்கு சொந்தமான விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட  மீனவர்கள் 4 பேரையும் படகுடன் மயிலட்டி கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  விசாரணை செய்த நீதிபதி, வரும் 7ம் தேதி வரை மீனவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டதால், 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் கலக்கம்: இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து, கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இலங்கை கடற்படையினர், பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் தமிழக மீனவர்கள், இடையூறு இல்லாமல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தற்போது மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளது, தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: