பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்தும் பழநியில் தொடர்கிறது பக்தர்களின் வருகை: பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் தேவை

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்தும் பக்தர்களின் வருகை அதிகளவு இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பழநி நகரில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இத்திருவிழா கடந்த மாரச்12ம் தேதி துவங்கியது. மார்ச் 18ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினத்துடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்தது. எனினும், தற்போதும் பழநி நகருக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிக கூட்டத்தின் காரணமாக வின்ச், ரோப்கார் மற்றும் மலைக்கோயிலில் பக்தர்களை கட்டுப்படுத்த தனியார் செக்யூரிட்டிகள் திணறி வருகின்றனர். மேலும், செக்யூரிட்டிகள் கட்டுப்படுத்தும்போது பக்தர்களுடன் மோதலும் ஏற்படுகிறது. எனவே, கோடை விடுமுறை முடிவடையும் வரை பழநி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணியை சேர்ந்த காவலர்களைக்கூட பாதுகாப்பு பணிக்கு சுழற்சி முறையில் பயன்படுத்தி, பக்தர்களை ஒழுங்குபடுத்தலாமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: