காமராஜர் பெயரில் ரூ.1000 கோடி செலவில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டதொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி இன்று இறுதி நாளாக நடைபெற்றது. இந்நிலையில்  சட்டபேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும். கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 2022 -23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3050 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: