ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பென்னாகரம் : கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்படும் யானைகள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் தஞ்சமடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோடைகாலம் துவங்கியுள்ளதால் யானைகள் கூட்டம், கூட்டமாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த வண்ணம் உள்ளன. இந்த யானைகள் ராசிகுட்டை, சின்னாறு வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. நாள்தோறும் காலை வேளையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு முண்டச்சி பள்ளம் என்னுமிடத்தில் ரோட்டை கடந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் வந்த ஒரு ஒற்றை யானை அரசு பஸ் மற்றும் காரை வழிமறித்தது.

பதறிய டிரைவர் பஸ்சை பின்னோக்கி செலுத்தினர். குறிப்பிட்ட தூரம் வரை வந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் புகுந்தது. இதை தொடர்ந்து மீண்டும் பஸ்சை டிரைவர் ஓட்டிச்சென்றார். இக்காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுப்பது வாடிக்கையாகி உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் குட்டை அமைத்தும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பியும் வைத்தால் வனப்பகுதியில் இருந்து யானைகள் வருதை தடுக்க முடியும் என்றனர்.

Related Stories: