அடுத்த 3 மாதங்களில் அமல் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிமீ.க்கு ஒரு சுங்கச்சாவடி : ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘தேசிய நேடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும்’ என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வணிகத்தை விரிவுப்படுத்தவும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி தங்கு தடையின்றி உரிய நேரத்தில் நடைபெற தரமான சாலைகள் தேவை. இவ்வாறு நெடுஞ்சாலைகளில் தரமான சாலைகள் அமைத்து, பராமரிக்க ஒன்றிய அரசு தனியாருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட  ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவை மீட்டெடுத்த பிறகு, சுங்கச்சாவடி கட்டணம்  40 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இதுகுறித்து, நேற்று முன்தினம் மக்களைவையில் பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள், ‘சுங்கச்சாவடிகளை ஒப்பந்த முறையில் நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் தொகையில் வெளிப்படைத்தன்மை இல்லை. நாட்டின் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட அரசுக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறியிருந்தனர். இந்நிலையில், மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசுகையில், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல் இந்தியாவில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 32 சுங்கச்சாவடி மூடலா?

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. இதன்படி தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சமீபத்தில் நேரில் சந்தித்த மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, சென்னையை ஒட்டி உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மனு அளித்தார். இந்தநிலையில், அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மாடல் பின்பற்ற முடிவு

சாலை பாதுகாப்பு குறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘நாட்டில் ஆண்டுதோறும் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். இதை தடுக்க உலக வங்கியுடன் இணைந்து மாற்றத்தை கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் விபத்து எண்ணிக்கையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தமிழக அரசின் முயற்சியால் விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. உலக வங்கி தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது. விபத்துகளை குறைப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு மாதிரியை செயல்படுத்துவதை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்’ என்றார்.

Related Stories: