முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களின் முதல்வர் மனிதநேய திருநாள் கொண்டாட்டம்

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களின்  முதல்வர் மனிதநேய திருநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கடந்த 1ம் தேதி கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் திமுக தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்களின்  முதல்வர் மனிதநேய திருநாள் விழா மற்றும் கவியரங்கம் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள  மியாசி மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கவியரங்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமை தாங்கிய இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர்  நல மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கவிஞர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் உரையாற்றிய பிறகு, இஸ்லாமியர்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அப்போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மாமன்ற உறுப்பினர் இசட் ஆசாத், பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், வட்டச் செயலாளர்கள் பார்த்திபன், கவியரசு, சிறுபான்மையினர் நல உரிமை  பிரிவு துணைச் செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக, அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசுக்கு பட்டாடை அணிவித்தார்.

Related Stories: