பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 14-ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயிலில் தினமும் இரவு மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்திய இசை முழங்க பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். .  இதை தொடர்ந்து நேற்று இரவு  குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை பயன்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. இதையடுத்து தீக்குண்டம் தயார் செய்யப்பட்டது. அதிகாலை 2.45 மணிக்கு மேளதாளம் முழங்க தெப்பக்குளத்திற்கு சென்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டத்தின் முன்பு தயார் செய்யப்பட்ட தீ குண்டத்திற்கு சுற்றிலும் கற்பூரம்  ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதிகாலை 3.55 மணிக்கு கோவில் பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் குண்டம் இறங்கிய உடன் நேராக கோயிலுக்குள் சென்று பண்ணாரி அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குண்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கென 1350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் சாரையாக கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். தீக்குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: