ரூ.12 லட்சம் கடனுக்கு ரூ.68 லட்சம் கேட்டு நிலம் ஏலம் விவசாயி தற்கொலை முயற்சி வங்கியை கண்டித்து போராட்டம்: குளித்தலையில் 80 பேர் கைது

குளித்தலை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயியான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிராக்டர் மற்றும் பைப்லைன் போடுவதற்கு ரூ.12லட்சம் கடன் பெற்று இருந்தார். அதில் ரூ.2 லட்சம் பிடித்தம் செய்து கொண்டு மீதி ரூ.10லட்சம் கொடுத்துள்ளனர். இதில் ரூ.9லட்சத்தை விவசாயி திருப்பி கட்டியுள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் ரூ.68 லட்சம் தரவேண்டுமென்று வழக்கு போட்டதோடு, பூர்வீக சொத்தான 11.5 ஏக்கர் நிலத்தை ரூ.58 லட்சத்திற்கு ஏலம் விட்டது. இதனால் பன்னீர்செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டிய வங்கி நிர்வாகத்தையும், ஒன்றிய அரசையும் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டபடி குளித்தலை பஸ் நிலையம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 80 பேரை  போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Related Stories: