பனையூர் இசிஆர் சாலையில் ரிசார்டில் மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சி: அதிரடி சோதனையில் 36 பெண்கள் சிக்கினர்

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீடுகள், திரையரங்குகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு மையங்கள், ரிசார்ட்கள் அதிகளவில் உள்ளன. இந்த பொழுதுபோக்கு மையங்களில் சட்டவிரோதமாக மது அருந்துதல், ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவையடுத்து, பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய பிரமுகருக்கு சொந்தமான ரிசார்ட்டில் இன்று அதிகாலை மதுவிலக்கு மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், அங்கு சட்டவிரோதமாக மது விருந்து, ஆடல் பாடலுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்த 36 பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 500 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்தனர்.

முன்னதாக, ரிசார்ட்டில் போலீசார் சோதனைக்கு வருவதை அறிந்ததும் பலர், அங்கு நிறுத்தியிருந்த தங்களின் கார்கள், இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். பிடிபட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வின்ச் என்கிற தனியார் நிறுவன மேலாளர் சைமன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தெரியவந்தது. இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலரிடம் ₹1500 முதல் ₹2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ரிசார்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகலவறிந்ததும் தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் ரவி சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பிடிபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களை போலீசார் எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் உள்பட 5 பேரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் ரவி கூறுகையில், இதுபோன்ற ரிசார்டுகளில் வார விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மதுவிருந்து மற்றும் ஆடல் பாடல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இளைஞர் சமுதாயத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார். மேலும், இந்த ரிசார்ட்டில் போலீசாரின் உரிய அனுமதியுடன் நிகழ்ச்சியை நடத்தினார்களா என உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Related Stories: