சென்னை விமானநிலையத்தில் அந்தமானுக்கு செல்லும் 5 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்தமான்-நிகோபார் தீவுகளின் அருகே கடந்த சில நாட்களாக வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக உருவாகி, அந்தமான்-நிகோபார் தீவு பகுதிகளை தாக்கும் அபாயநிலை உள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் நேற்று (19ம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. மேலும், சென்னை விமானநிலையத்தில் நேற்று அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பயணிகள் அந்தமானுக்கு செல்லும் பயண தேதிகளை மாற்றியமைத்தனர். இதனால் அந்தமானுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் இருந்து நாள்தோறும் 9 பயணிகள் சென்று வருகின்றன. இந்த விமானங்களில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் செல்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் சுற்றுலாப் பயணிகள் எனக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்தமானில் புயல் அபாய எச்சரிக்கையை தொடர்ந்து இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து அந்தமானுக்கு செல்லும் காலை 4.35 மணி, 7.10 மணி, 8.30 மணி, 8.45 மணி, 10.45 மணி ஆகிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் முன்பதிவு செய்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள், மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: