மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு: காவடியுடன் வந்த பக்தர்களை உற்சாகப்படுத்திய முஸ்லிம்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் காவடி சுமந்த பக்தர்களை முஸ்லிம்கள் உற்சாகப்படுத்தியது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் 82ம் ஆண்டு பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக வந்தனர்.

அலகு குத்தி கோயில் வந்த பக்தரை பரவசப்படுத்தும் வகையில், முஸ்லிம் வாலிபர் ஒருவர் சாம்பிராணி புகை போட்டு, ஆடி, பாடி உற்சாகப்படுத்தினார். ராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் சார்பில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், தங்கச்சிமடம் பகுதியில் காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு அப்பகுதி முஸ்லிம்கள் குளிர்பானம் வழங்கி மத நல்லிணக்கத்தை கடைபிடித்தனர்.

மண்டபம் சேதுநகர் வீரபத்திர பாலதண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர விழாவில் 11வது வார்டு கவுன்சிலர் முபாரக் அன்னதானம் வழங்கினார். முஸ்லிம் வாலிபர் சாம்பிராணி புகை போட்டு முருக பக்தரை உற்சாகப்படுத்தும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: